Monday, 7 January 2013

டெல்லி கிரிக்கெட்: கடுமையாகப் போராடி இந்தியாவுக்கு 'த்ரில்' லான ஆறுதல் வெற்றி!!

Ms Dhoni Doubtful 3rd Odi Due Sore Back
டெல்லி கிரிக்கெட்: கடைசி நேர திருப்பத்தில் பெரும் போராட்டத்தில் இந்திய அணிக்கு த்ரில்லான ஆறுதல் வெற்றி!!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி நேர திருப்பத்தில் கடுமையான போராட்டத்துக்கு இடையே த்ரில்லாக 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. ஒருநாள் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்த இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றி!
இந்தியா வருகை தந்துள்ள பாகிஸ்தான் அணியுடனான 2 ஒருநாள் போட்டிகள் சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்தியா தோல்வியை சந்தித்தது. இன்றைய போட்டியில் ஷேவாக் இடம்பெறவில்லை. ரஹானேவும் அசோக் திண்டாவுக்குப் பதில் சமி அகமது சேர்க்கப்பட்டனர்.
சொதப்பல் இந்தியா
போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக காம்பீரும் ரஹானேவும் களமிறங்கினர். 4.3-வது ஓவரில் இந்திய அணி 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரஹானே அவுட் ஆனார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து மேலும் சில ஓவர்கள் தாக்குப் பிடித்த காம்பீர் 8.4வது ஓவரில் 15 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இவர்களைப் போலவே கோஹ்லி 7 ரன்களில் வெளியேறினார். 15.5-வது ஓவரில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த யுவராஜ்சிங் அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி முக்கிய 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த போது மொத்தம் 63 ரன்களே எடுத்திருந்தது.
167 ரன்கள்..
பின்னர் டோணியும் ரெய்னாவும் சிறிது ரன்களை சேர்க்க ஒருவழியாக 100 ரன்களைக் கடந்தது இந்திய அணி. 111 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் ரெய்னா அவுட் ஆனார். அடுத்து வந்த அஸ்வின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இந்திய அணி 131 ரன்களை எடுத்த போது டோணியும் அவுட் ஆனார். பின்னர் எவரும் நிலைத்து நிற்கவில்லை. 43.4 -வது ஓவரில் 167 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டையும் இந்தியா பறிகொடுத்தது. பாகிஸ்தான் வெல்ல 168 ரன்கள் என்ற எளிதான இலக்கை நிர்ணயித்தது.
பாகிஸ்தானும் தடுமாற்றம்
பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னன் ஜாம்ஷெட்டும் கம்ரன் அக்மலும் களமிறங்கினர். தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தார் புவனேஷ்வர். 2.1-வது ஓவரில் அக்மலை சாய்த்தார். அடுத்த 6.5வது ஓவரில் யூனூஸ் கானையும் புவனேஷ்வர் வெளியேற்றினார். அந்த அணியின் தூணான ஜாம்ஷெட் 34 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் அகப்பட்டு வெளியேறினார். கேப்டன் மிஸ்பா உல்ஹக்கு உமர் அக்மலும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை 100 ரன்களைக் கடக்க வைத்தனர். 113 ரன்களை அந்த அணி எடுத்த நிலையில் 34.1 -வது ஓவரில் அஸ்வின் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் மொத்தம் 39 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் உமர் அக்மலுடன் சோயப் மாலிக் இணைந்தார். ஆனால் மாலிக் 5 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. அவுட் ஆகினார். அப்போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்திருந்தது.
கடைசி நேர திருப்பம்
நிலைத்து நின்று 25 ரன்களை எடுத்திருந்த உமர் அக்மல் 39.2வது ஓவரில் ஜடேஜா பந்தில் அவுட் ஆனதால் ஆட்டம் பரபரப்பானது. ஓவர்கள் இருந்தாலும் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் சடசடவென சரிந்ததால் ஏதாவது திருப்பம் ஏற்படும் என்ற நிலை உருவானது. 7 ஓவர்களில் 30 ரன்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஆடுகளம் பரபரப்பானது. ஒரு கட்டத்தில் 24 பந்துகளில் 24 ரன்களை எடுக்க வேண்டிய நிலை உருவானதால் ரசிகர்களிடம் கடைசி நேர டென்ஷன் தொற்றிக் கொண்டது.
கடைசி ஓவர்களில் டென்ஷன்
இந்த டென்ஷ்ன் பாகிஸ்தானின் உமர் குல் 11 ரன்கள் எடுத்த நிலையில் 46.2-வது ஓவரில் அவுட் ஆக பாகிஸ்தானின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களாக இருந்தது. அந்த அணி வெற்றி பெற 22 பந்துகளில் 24 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடிக்குப் போனது. இதனால் ரசிகர்களிடையே டென்ஷன் இன்னும் உச்சமானது. 11 ரன்களுடன் களத்தில் இருந்த ஹபீசுடன் அஜ்மல் இணைந்தார். ஆனால் வந்த வேகத்தில் அஜ்மல், சமி அகமது பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆன ஆடுகளத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். இந்தியா வெற்றியை நோக்கிப் பயணிப்பது உறுதியானது. அப்போது 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. ஆனால் வந்த வேகத்தில் ஜூனைத்கான் டக் அவுட் ஆகிவிட இந்தியா த்ரில் வெற்றியை கொண்டாட தயாரானது.
15 பந்துகளில் 23 ரன்களை எடுத்தாக வேண்டிய நிலையில் முகமது இர்பான் களமிறங்கினார். கடைசி இரண்டு ஓவர்கள்தான் என்ற நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் அடித்து விளையாடினர். இதனால் 9 பந்துகளில் 16 ரன்கள் என்ற நிலை உருவானது. இஷாந்த் சர்மா வீசிய 49- வது ஓவரில் ரன்களை குவித்த பாகிஸ்தானின் ஹபீஸ் விக்கெட் 48.5-வது ஓவரில் பறிபோக இந்திய அணி கடும் போராட்டத்துக்கு இடையே 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் அணியால் 157 ரன்களை மட்டும் எடுக்க முடிந்தது
3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
 

No comments:

Post a Comment