சென்னை: இன்று போய் நாளை வா என்னுடைய கதை, எனது படைப்பு என்பது தமிழ்
சினிமாவில் தெரியாதவர்களே கிடையாது. அப்படி இருந்தும் என் கதையை தனக்கு
சொந்தமானது என பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விற்றிருப்பதை
என்னவென்பது, என்கிறார் வேதனையுடன் இயக்குநர் கே பாக்யராஜ்.
திரைக்கதை மன்னன் என்றும் இயக்குநர் திலகம் என்று புகழப்படும் கே பாக்யராஜ்
இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் இன்று போய் நாளை வா. இந்தப்
படத்தின் கதையை பாக்யராஜுக்கே தெரியாமல் விற்று பெரும் பணம்
சம்பாதித்துள்ளார் புஷ்பா கந்தசாமி. அந்தக் கதையை சத்தமில்லாமல் கண்ணா
லட்டு தின்ன ஆசையா என்று படமாக எடுத்து, பொங்கலுக்கு அவசர அவசரமாக
வெளியிடத் தயாரானபோது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர் தயாரிப்பாளர்கள்
ராம நாராயணனும் சந்தானமும்.
இந்தக் கதைத் திருட்டு குறித்து போலீசுக்கு 3 பக்க புகார் கடிதம்
அனுப்பியுள்ள பாக்யராஜ், படத்தைத் தடை செய்ய வழக்குத் தொடரவும் தயாராகி
வருகிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தன் வேதனையை கொட்டித் தீர்த்துவிட்டார்.
"தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவில் உள்ள அனைவருக்குமே தெரியும்
எனது கதைகள் பற்றி. யாராக இருந்தாலும் என் கதையை உரிய முறையில் கேட்டு படம்
பண்ணி ஜெயித்திருக்கிறார்கள். இந்தியில், தெலுங்கில் இன்று வரை
அப்படித்தான் நடக்கிறது.
ஆனால் இங்கே தமிழ் சினிமாவில் நடந்திருக்கும் அநியாயம் சொல்ல முடியாதது.
ஒரு படைப்பாளியை இப்படியா கேவலப்படுத்துவார்கள்?
கதைக்கு சொந்தக்காரன் நான். திரைக்கதை, வசனம் அனைத்தும் எனக்கே உரியது.
இந்தக் கதையை படமாக எடுக்க புஷ்பா கந்தசாமி என்னிடம் கேட்டார். நான்
தரமுடியாது என்று கூறிவிட்டேன். காரணம் என் மகனை வைத்து இந்தப் படத்தை
எடுத்து அவனுக்கு ஒரு பிரேக் தர விரும்பினேன். அடுத்து ராமநாராயணன்
கேட்டார். அவருக்கும் அதே பதில்தான்.
நான் கதையைத் தரவில்லை என்றவுடன், என் கதையின் உரிமை தன்னிடம் இருப்பதாகக்
கூறி புஷ்பா கந்தசாமியும் அவரது குடும்பத்தினரும் ராமநாராயணனுக்கு விற்று
பணம் பார்த்திருக்கிறார்கள்.
இது நியாயமா...?," என்றார்.
No comments:
Post a Comment